ஈப்போ, ஆகஸ்ட்.26-
கிரவல் மண் நிறைந்த மலைச்சாரலில் மண் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த மண்வாரி இயந்திரம் ஒன்று, மண் சரிவில் குடை சாய்ந்ததில் அதன் ஓட்டுநர், அந்த கனரக வாகனத்தின் அடியில் சிக்கி உயிரிழந்தார்.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை, பேரா, சிம்பாங் பூலாய், கெராமாட் பூலாய், கல்லுடைப்புப் பகுதியில் நிகழ்ந்தது. 60 வயது மதிக்கத்தக்க ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.
இந்தச் சம்பவம் குறித்து பிற்பகல் 1.52 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை இலாகாவின் இடைக்கால துணை இயக்குநர் ஷாஸ்லின் முகமட் ஹனாஃபியா தெரிவித்தார்.
கவிழ்ந்து கிடந்த மண்வாரி இயந்திரத்தின் ஓட்டுநர் இருக்கை, மண் மேடாக மாறியதால், ஓட்டுநரைத் தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் மற்றொரு மண்வாரி இயந்திரத்தின் உதவியுடன் மண்மேடு கரைக்கப்பட்டு, ஓட்டுநரின் சடலம் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டதாக ஷாஸ்லின் குறிப்பிட்டார்.








