கோலாலம்பூர், ஜூலை.24-
எஸ்பிஆர்எம் விசாரணைக்குச் செல்வதாகக் கூறி, வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற ஒரு வர்த்தகப் பெண்மணியான டத்தின் பமேலா லிங் மர்மமான முறையில் காணாமல் போனது குறித்து அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆகக் கடைசியான நிலவரத்தைப் போலீஸ் துறை அறிவிக்க வேண்டும் என்று இன்று நாடாளுமன்றத்தில் ஜெலுதோங் எம்.பி. R.S.N. ராயர் கேட்டுக் கொண்டார்.
கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் அந்த வர்த்தகப் பெண்மணி காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண்மணி காணாமல் போனது, பலரது கவன ஈர்ப்பாக மாறியுள்ளது. அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதில் இதுவரை எந்தவொரு பலனும் கிட்டாதது, பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவிட்டுள்ளதாக ராயர் குறிப்பிட்டார்.
அந்த வர்த்தகப் பெண்மணி கடத்தப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டாலும் அவரின் நிலை குறித்து போலீசார் தங்கள் விசாரணை எந்த கட்டத்தில் உள்ளது என்பதை அறிவிக்க வேண்டும் என்று ராயர் கேட்டுக் கொண்டார்.








