Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஜோகூர், சிகாமட்டில் மீண்டும் மிதமான நில நடுக்கம்: அச்சத்தில் மக்கள்
தற்போதைய செய்திகள்

ஜோகூர், சிகாமட்டில் மீண்டும் மிதமான நில நடுக்கம்: அச்சத்தில் மக்கள்

Share:

சிகாமட், ஆகஸ்ட்.27-

ஜோகூர், சிகாமட்டில் இன்று காலையில் மீண்டும் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆகப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

காலை 8.59 மணியளவில் ஏற்பட்ட இந்த மிதமான நில நடுக்கம் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா அறிவித்தது.

சிகாமட்டில் ஏற்பட்ட இந்த மிதமான நில நடுக்கம், ஜோகூர் மாநிலம் மட்டுமின்றி பகாங்கிலும் உணரப்பட்டதாக அது தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சிகாமட் பகுதி தற்போது அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக மெட்மலேசியா தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகாமட்டிலும், யொங் பெங்கிலும் ஏற்பட்ட லேசான நில நடுக்கத்திற்குப் பிறகு இன்று மூன்றாவது முறையாக நில நடுக்கம் ஏற்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6.13 மணிக்கு ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 எனப் பதிவானதாக மெட்மலேசியா தெரிவித்தது.

சிகாமட்டிற்கு ஐந்து கிலோமீட்டர் மேற்கே, பத்து கிலோமீட்டர் ஆழத்தில் அந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது.

நில நடுக்கத்தின் அதிர்வு, ஜோகூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, பகாங் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் உணரப்பட்டது.

காலை 9 மணிக்கு இரண்டாவது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆகப் பதிவுச் செய்யப்பட்டது. இம்முறை ஏற்பட்ட நில நடுக்கம் பத்து பஹாட்டில் யொங் பெங்கிற்கு வடகிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவில் அது மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும் ஆகக் கடைசியாக ஜோகூர் மாநிலத்தில் மூன்றாவது முறையாக ஏற்பட்டுள்ள இந்த நில நடுக்கத்தால் மக்கள் அச்சம் கொள்ளத் தொடங்கியிருப்பதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது.

இருப்பினும் நடப்புச் சூழல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மெட்மலேசியா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

Related News