May 4, 2026
Thisaigal NewsYouTube
ரஃபிஸி மீதான ஊழல் புகார்கள் வெளிப்படையாக விசாரிக்கப்பட வேண்டும் - அன்வார் இப்ராஹிம்
தற்போதைய செய்திகள்

ரஃபிஸி மீதான ஊழல் புகார்கள் வெளிப்படையாக விசாரிக்கப்பட வேண்டும் - அன்வார் இப்ராஹிம்

Share:

கோல லங்காட், பிப்ரவரி.20-

பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும், முன்னாள் பொருளாதார அமைச்சருமான ரஃபிஸி ரம்லி தொடர்பான ஊழல் புகார்கள் உட்பட எந்தவொரு குற்றச்சாட்டுகளும் வெளிப்படையான முறையிலும் திறந்த மனதுடனும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், விசாரணை முடிவதற்கு முன்பே தண்டனை வழங்குவது முறையல்ல என்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

பழி தூற்றுவதைத் தவிர்க்கும் பொருட்டு, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு போதிய இடமளிக்க வேண்டும் என்றும் அன்வார் கேட்டுக் கொண்டார்.

இந்த ரமலான் மாதத்தில் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொள்ள வேண்டாம். புகார் இருந்தால், அதைச் சரியாக விசாரிப்போம். தவறு செய்ததற்கான ஆதாரம் இருந்தால், அவர்கள் மீது வழக்குத் தொடரட்டும். ஆனால், விசாரணைக்கு முன்பே செய்திகளைப் பரப்பவோ அல்லது ஒருவரைத் தண்டிக்கவோ வேண்டாம். இது நம் நாட்டின் ஒரு பிரச்சனையாக உள்ளது; ஒருவர் மீது புகார் எழுந்தாலே, உண்மை தெரியாமல் உடனடியாகக் குதிப்பதும், விமர்சிப்பதும் நடக்கிறது. இது அவதூறாக முடியக்கூடும்," என்று Buletin TV3 செய்தி துறையினரிடம் அன்வார் தெரிவித்தார்.

கோல லங்காட், பந்திங்கில் உள்ள Kampung Seri Cheding பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது அன்வார் இதனைக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் மீதான புகார்கள் உட்பட எந்தவொரு குற்றச்சாட்டுகளையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும், ஆனால் அனைவரும் நீதி மற்றும் சட்ட நடைமுறைகளின் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.

முன்னதாக இன்று, 2.5 பில்லியன் ரிங்கிட் ஊழல் வழக்கில் தொடர்புடையதாகத் தன் மீது சுமத்தப்பட்ட இரண்டு தவறான குற்றச்சாட்டுகளுக்கு விரிவான விளக்கத்தை அளிக்கப் போவதாக ரஃபிஸி ரம்லி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News