சிரம்பான், ஆகஸ்ட்.16-
நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் ரெப்பா சட்ட மன்ற உறுப்பினருமான வீரப்பன் சுப்ரமணியம் யாயாசான் நெகிரி செம்பிலான் மடிக் கணினி வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். ரெப்பா சட்ட மன்றச் சேவை மையத்தின் மூலம் இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட மொத்தம் எழுவர் யாயாசான் நெகிரி செம்பிலான் மடிக்கணினிகளை பெற்றுக் கொண்டனர். இதனிடையே, தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான உதவி (பிஏஎஸ்&பிஏஎன்), ஆயிரம் ரிங்கிட் வரையிலான பொது உயர்க்கல்விக்கூட உதவி, மாணவர்களுக்கு மாதம் தோறும் 200 ரிங்கிட் வாழ்க்கைச் செலவுபடி மற்றும் ஐயாயிரம் ரிங்கிட் முதல் நிலை தேர்ச்சி பட்டப்படிப்பு சிறப்பு விருது உள்ளிட்ட கல்வி தொடர்பான நெகிரி செம்பிலான் அரசாங்கத்தின் முன்முயற்சிகளை அந்நிகழ்வில் வீரப்பன் எடுத்துரைத்தார்.

நெகிரி செம்பிலான் அரசாங்கம் மாநில மக்களின் கல்வி வளர்ச்சியில் முக்கியத்துவம் அளித்து அவர்களின் கல்விச் செலவுகளைக் குறைக்க பாடுபடுவதாகவும் அவர் கூறினார். கல்வியில் சிறந்து விளங்குவதோடு நாட்டிற்கு பயனுள்ள குடிமக்களாக மாறுவதற்கும் இத்தகைய உதவிகள் இயன்ற வரை சிறப்பாகப் பயன்படுத்தப்படும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த முயற்சி மலேசியா மடானியின் கொள்கைகளின் ஒன்றான வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய 'நல்வாழ்வு' என்பதற்கு ஏற்ப இருக்கிறது.









