கோலாலம்பூர், ஜனவரி.09-
இராணுவத் தளவாடக் கொள்முதல் ஊழல் தொடர்பான விசாரணையில் மேலும் சில உயர் அதிகாரிகள் விரைவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே கைதான முன்னாள் தரைப்படைத் தளபதியைத் தவிர, மற்றுமோர் உயர்மட்ட இராணுவ அதிகாரியிடம் விசாரணை நிறைவடையும் நிலையில் உள்ளது. சட்டத்துறைத் தலைவரின் அனுமதி கிடைத்தவுடன் அந்த அதிகாரி விரைவில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என்று அஸாம் பாக்கி தெரிவித்தார்.
இந்த ஊழல் விவகாரத்தில் முறைகேடாகக் குத்தகைகளைப் பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் 17 நிறுவன இயக்குநர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, வரும் ஜனவரி 10 வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.








