May 6, 2026
Thisaigal NewsYouTube
சுற்றுலாத் துறை பாதுகாப்பு: 10,000 பணியாளர்களுக்கு இலவசப் பயிற்சி வழங்கும் 'சிட்டி' (SITI) திட்டம் - அமைச்சர் ஆர். ரமணன்
தற்போதைய செய்திகள்

சுற்றுலாத் துறை பாதுகாப்பு: 10,000 பணியாளர்களுக்கு இலவசப் பயிற்சி வழங்கும் 'சிட்டி' (SITI) திட்டம் - அமைச்சர் ஆர். ரமணன்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.12-

மனிதவள அமைச்சான கெசுமா (KESUMA), சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சுடன் இணைந்து ‘மலேசியா வருகை ஆண்டு 2026’-ஐ முன்னிட்டு 10 ஆயிரம் சுற்றுலாத் துறை பணியாளர்களுக்கு இலவச பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பயிற்சியை வழங்கவுள்ளது.

SITI என்ற அழைக்கப்படும் 'சுற்றுலாத் துறை பாதுகாப்பு தூண்டல் திட்டம்' என்ற இந்த முயற்சிக்கு 2.65 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. 47 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், பாதுகாப்புத் தரத்தை உறுதிப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும் என்று மனித வள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.

இந்த ஒரு நாள் பயிற்சித் திட்டமானது சுற்றுலா வழிகாட்டிகள், ஹோட்டல் பணியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் உட்பட இத்துறையில் உள்ள அனைவருக்கும் திறக்கப்பட்டுள்ளது. நியோஷ் ((NIOSH) எனப்படும் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தால் நடத்தப்படும் இப்பயிற்சியில் விபத்துத் தடுப்பு, சட்ட விதிகள் மற்றும் இடர் மேலாண்மை போன்ற முக்கிய அம்சங்கள் போதிக்கப்படும். சேவைகளில் எதிர்பார்ப்புகள் மாறினாலும், பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்ய முடியாது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

நியோஷ் ((NIOSH) இலாகாவிற்கு இன்று பணி நிமித்தமாக மேற்கொண்ட வருகைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஶ்ரீ ரமணன் இதனைத் தெரிவித்தார்.

பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பங்கேற்பாளர்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு பாஸ்போர்ட் வழங்கப்படும். இந்த அட்டை இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் 24 மணிநேர காப்பீட்டு வசதியையும் உள்ளடக்கியது. இது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொருந்தும். இந்த டிஜிட்டல் பாஸ்போர்ட், சம்பந்தப்பட்ட பணியாளர் தற்போதைய பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தரங்களுக்கு இணங்க பயிற்சி பெற்றுள்ளார் என்பதற்கான சான்றாக அமையும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

இதற்கான ஆன்லைன் பதிவு வரும் ஜனவரி 25-ஆம் தேதி முதல் NIOSH அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடங்குகிறது. 'முதலில் வருபவருக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் 10,000 இடங்கள் நிரப்பப்படும் வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால், எதிர்காலத்தில் இது மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்வில் மனித வள துணை அமைச்சர் டத்தோ கைருல் ஃபிடாவுச் அக்பார் கான் மற்றும் நியோஷ் நிர்வாக இயக்குநர் டத்தோ அயோப் சாலே ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related News