கடந்த ஆண்டில் கெடா, சிந்தோக்கில் வட மலேசியப் பல்கலைக்கழகத்தின் மாணவர் தங்கும் விடுதியில் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்ததாக கூறப்படும் மாணவி எஸ். வினோஷினி சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை அவரின் தந்தையிடம் ஒப்படைக்க அலோர் ஸ்டார் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தினத்திலிருந்து 14 நாட்களுக்குள் சாட்சியப் பொருட்கள் உட்பட முக்கிய ஆவணங்கள், மாணவி வினோஷினியின் தந்தை ஆர்.சிவகுமாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி மஹாசான் தாயிப், போலீஸ் துறைக்கு ஆணைப் பிறப்பித்துள்ளார்.கிள்ளானைச் சேர்ந்த மாணவி வினோஷினியின் குடும்பத்தார் சார்பில் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் ஆஜராகினார். முன்னதாக, வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் மற்றும் அரசு தரப்பில், கூட்டரசு முதிர் நிலை வழக்கறிஞர் அலிசா ஜமாலுடின் ஆகிய இரு தரப்பினரின் வாதத் தொகுப்புகளை நீதிபதி மஹாசான் தாயிப் செவிமடுத்தார். முக்கிய ஆவணங்களை கோரி விண்ணப்பம் செய்துள்ள வினோஷினியின் தந்தை சிவகுமாரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் அலிசா ஜமாலுடின் , நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார். காரணம், அந்த ஆவணங்கள் ரகசிய காப்புச் சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.ஓர் எதிர்பார்ப்புடன் கண்மூடித்தனமாக மாணவி வினோஷினின் தந்தை இந்த விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
அவரின் வாதத்திற்கு எதிர்வினையாற்றிய வழக்கறிஞர் மனோகரன் மலையாளம், மாணவி வினோஷி சம்பந்தப்பட்ட போலீஸ் அறிக்கை, சவப்பரிசோதனை அறிக்கை, இரசாயன அறிக்கை மற்றும் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவசியம் தேவைப்படுகின்றன து என்று நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார். தமது மகள் வினோஷியின் மரணம் தொடர்பில் நீதிக் கேட்டு போராடி வரும் ஒரு தந்தை, தமது மகளின் மரணத்தில் வட மலேசிய பல்கலைக்கழகத்தின் கவனக்குறைவு அல்லது அலட்சியப் போக்கு நிகழ்ந்து இருக்குமா? என்ற சந்தேகத்தின் பேரில் சிவில் வழக்கு ஒன்றை தொடுக்கவிருக்கிறார்.எனவே வழக்கை சார்வு செய்வதற்கு இந்த ஆவணங்கள் முக்கியமாக தேவைப்படுகின்றன என்று வழக்கஞர் மனோகரன் மலையாளம் முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.








