முத்ரா எனப்படும் இந்திய தொழில்முனைவோருக்கான நிதி மற்றும் பொருளாதாரத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 220 மில்லியன் ரிங்கிட் நிதியில், கடந்த ஆகஸ்ட் மாதம் வரையில், கிட்டத்தட்ட 6,000 இந்திய தொழில்முனைவோருக்கு 140 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாக தொழில்முனைவோர்மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் தெக்குன் நேஷனலின் கீழ் செயல்படும் ஸ்பூமி திட்டத்திற்காக 120 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 64 மில்லியன் ரிங்கிட் நிதியானது 1,900-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோருக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றில் சுமார் 39 மில்லியன் ரிங்கிட், ஏற்கனவே எந்த நிதியுதவியும் பெறாத முதல் முறை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதையும் ஸ்டீவன் சிம் சுட்டிக் காட்டியுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மைக்கி (MAICCI) எனப்படும் மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபைகளின் கூட்டமைப்பின் 2026-ஆம் ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்ட ஸ்டீவன் சிம், இந்த திட்டங்களானது இதுவரை அரசாங்கத்தின் நிதியுதவிகளைப் பெறாத மேலும் பல இந்திய தொழில்முனைவோரை சென்றடைவதே அதன் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்துக்காக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை நிதி அமைச்சிடம் குஸ்கோப் சமர்ப்பித்துள்ளது.

தொழில்முனைவோருக்கான நிதியை அதிகரித்தல், தொழில் நடத்தும் செலவைக் குறைத்தல் மற்றும் அரசின் சேவை வழங்கலை மேம்படுத்துதல் ஆகியவை முக்கிய பரிந்துரைகளாக உள்ளன.








