கிளந்தான் மாநிலத்தில், போலீஸ் அதிகாரிகள் போல் நாடகமாடி மோசடி செய்த கும்பலிடம், 75 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் சுமார் 15 ஆயிரம் ரிங்கிட்டை இழந்துள்ளார். மேலும், அவரது இரண்டு ஏடிஎம் அட்டைகள் மற்றும் மனைவியின் தங்கச் சங்கிலி, பதக்கம் ஆகியவற்றையும் கும்பல் பெற்றுச் சென்றுள்ளது.
கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி, ஜோகூர் போலீஸ் தலைமையக அதிகாரி எனக் கூறி சம்பந்தப்பட்ட ஆசிரியரைத் தொடர்பு கொண்ட நபர், 25 ஆயிரம் நீதிமன்ற சம்மன் இருப்பதாகவும், பணமோசடி மற்றும் போதைப்பொருள் வழக்கில் அவர் தொடர்புடையவர் என்றும் கூறியுள்ளார்.
பின்னர், புக்கிட் அமான் மூத்த போலீஸ் அதிகாரி எனக் கூறிய மற்றொரு நபர், வழக்கை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது எனக் கூறி ஏடிஎம் அட்டைகள் மற்றும் தங்கச் சங்கிலியை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து வீட்டுக்கு வந்த 31 வயது பெண் ஒருவர் பொருட்களைப் பெற்றுச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் செப்டம்பர் 13-ஆம் தேதி கோத்தா பாரு பகுதியில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் யுசோஃப் மாமாட் தெரிவித்தார்.
இந்நிலையில் முதியவரின் ஏடிஎம் அட்டைகளை முடக்கியதால் பணப் பரிவர்த்தனை எதுவும் நடைபெறவில்லை. அப்பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலி மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 420-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.








