டியூஷன் எனப்படும் தனியார் கல்வி நிலையங்களின் உரிம கட்டமைப்பை மறுபரிசீலனை செய்வதற்கான முன்மொழிவை அடுத்த வாரம் அமைச்சரவையின் பரிசீலனைக்கு கல்வி அமைச்சு சமர்ப்பிக்கவுள்ளது.
2027-ஆம் ஆண்டிற்கான உரிமம் புதுப்பிக்கப்படும் போது டியூஷன் நிலையங்கள் 30 சதவீத பூமிபுத்ரா பங்கைக் கொண்டிருக்க வேண்டும் என்ற விதிமுறை தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்படுகின்றது.
மேலும், மலேசிய குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ச்சிக்கு பங்களிக்க விரும்பும் அனைத்து தரப்பினருக்கும் கல்வித்துறை திறந்த நிலையில் இருக்க வேண்டும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளையில் இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கருத்துகளை தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாகவும், அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சு கூறியுள்ளது.
பல ஆண்டுகளாக கல்வித்துறைக்கு பங்களித்து வரும் டியூஷன் நிலையங்களின் நிர்வாகிகளுக்கும் அமைச்சு நன்றி தெரிவித்துள்ளது.
கடந்த வார தொடக்கத்தில் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங், டியூசன் நிலையங்களுக்கான விதிமுறைகள் குறித்து கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
அடுத்த ஆண்டு உரிமம் புதுப்பிக்கப்படுவதற்கு டியூஷன் நிலையங்கள் 30 சதவீத பூமிபுத்ரா பங்கைக் கொண்டிருக்க வேண்டும் என அமைச்சின் வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








