ஓடுபாதையில் பள்ளங்கள் ஏற்பட்டதால் கோட்டா கினபாலு அனைத்துலக விமான நிலையம் சமீபத்தில் மூடப்பட்டதைத் தொடர்ந்து, புதிய விமான நிலையம் அமைப்பது அவசரத் தேவையாக இருப்பதாக சபா மாநில ஸ்டார் கட்சித் தலைவர் டத்தோ ஜெஃப்ரி கிட்டிங்கான் தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்து மற்றும் நேரடி விமானச் சேவைகளைக் கருத்தில் கொண்டால், ஒரே ஓடுபாதையைக் கொண்டுள்ள தற்போதைய கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையம் இனி நடைமுறைக்கு ஏற்றதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் புதிய விமான நிலையத்துக்கான பொருத்தமான இடத்தை அடையாளம் காண்பது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளையில் சபா மாநிலத் தலைநகருக்கு அருகிலுள்ள பாபார்-கிமானிஸ் பகுதியை புதிய விமான நிலையத்துக்கான இடமாக தீவிரமாக பரிசீலித்து, ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.








