ஷா ஆலாம், நவம்பர்.24-
வழக்கறிஞர் நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்ற குற்றத்தை முன்னாள் வங்கி அதிகாரி ஒருவர் ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று ஒப்புக் கொண்டார்.
RHB வங்கி மற்றும் Maybank ஆகியவற்றின் முன்னாள் அதிகாரியான 48 வயது கூ கோக் பெங், நீதிபதி அவாங் கெரிஸ்நாடா அவாங் மஹ்மூட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
அந்த அதிகாரிக்கு எதிராக 2009 ஆம் ஆண்டு மலேசிய ஊழல் ஆணையமான எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் மூன்று லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.
2 ஆயிரத்து 200 வெள்ளி தொடர்பில் இரு குற்றச்சாட்டுகளும், 2 ஆயிரத்து 45 வெள்ளி தொடர்பில் ஒரு குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டன.
கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா, Kelana Parkview Tower, கிளானா ஜெயா கிளையின் மே பேங்க் வங்கியில் Arizal Jailani & Co என்ற வழக்கறிஞர் நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக முதல் இரண்டு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.
கடந்த 2018 முதல் 2020 ஆம் ஆண்டு நவம்பர் 20 வரை மற்றொரு லஞ்ச ஊழல் குற்றத்தைப் புரிந்ததாக அந்த முன்னாள் அதிகாரிக்கு எதிராக மற்றொரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
இதனிடைய பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மற்றொரு வங்கி அதிகாரி மீது மொத்தம் 10 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன. 36 வயது Muhammad Saiful Syafie என்ற அந்த வங்கி அதிகாரி, Anuar Hong & Ong என்ற வழக்கறிஞர் நிறுவனத்திடமிருந்து 8 ஆயிரத்து 580 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.








