கோலாலம்பூர், நவம்பர்.22-
மலேசிய ஆயுதப்படை மற்றும் தற்காப்புப் புலனாய்வு அமைப்பின் தளபதிகளான நிஸாம் ஜஃபாரும் ரஸாலி அலியாஸும் விரைவில் தங்களது பதவிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளனர்.
இருவரும் அடுத்த ஆண்டு 60 வயதை எட்டுவதால், அவர்கள் பதவி ஓய்வு பெறுவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தற்காப்பு புலனாய்வு அமைப்பு உட்பட மலேசிய இராணுவத்தைச் சேர்ந்த சில மூத்த அதிகாரிகள், லஞ்ச ஊழல் குற்றத்திற்காக, எஸ்பிஆர்எம்மின் விசாரணையில் சிக்கியுள்ள நிலையில், இந்த ஓய்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
என்றாலும், எஸ்பிஆர்எம்மின் விசாரணைகளுக்கும், இந்த இரு மூத்த அதிகாரிகளின் ஓய்வுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதை காலிட் நோர்டின் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம், போதைப் பொருள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஐந்து மூத்த இராணுவ மற்றும் கடற்படை அதிகாரிகளை எஸ்பிஆர்எம் கைது செய்தது.
அவர்களில் இருவர் தற்காப்புப் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் என்றும் எஸ்பிஆர்எம் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கானது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடியது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கவலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








