கோலாலம்பூர், ஆகஸ்ட்.28-
பள்ளிகளில் மாணவர்களுக்குப் பிரம்படித் தண்டனை கொடுக்கும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்துதற்கு முன்மொழியப்பட்டுள்ள யோசனையை பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் வரவேற்றது.
மாணவர்களைக் கட்டொழுங்கு மிக்கச் சீலர்களாக உருவாக்குவதற்கு முந்தைய காலத்தில் அமல்படுத்தப்பட்ட சிறந்த அணுகுமுறையான பிரம்படித் தண்டனை முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுவது சாலச் சிறந்த நடவடிக்கையாகும் என்று அந்த சம்மேளனத்தின் தலைவர் அலி ஹசான் தெரிவித்தார்.
எனினும் பிரம்படித் தண்டனை முறை அமலாக்கத்தில் துஷ்பிரயோகம் எதுவும் நடக்காமல் இருக்க முறையான வழிகாட்டலுடன் இந்தத் தண்டனை அமல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தனார்.
பள்ளிகளில் பிரம்படித் தண்டனை கொடுக்கும் நடைமுறை அகற்றப்பட்டதால் மாணவர்களிடையே கட்டொழுங்குச் சீர்குலைந்து இருப்பதுடன் இன்று பல்வேறு சமூகவியல் பிரச்னைகள் பள்ளிகளில் தலைத்தூக்கத் தொடங்கியுள்ளன என்று மக்களவையில் உலு திரெங்கானு எம்.பி. ரோசோல் வாஹிட் வலியுறுத்தி இருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் அலி ஹசான் இதனைத் தெரிவித்தார்.








