ஷா ஆலாம், செப்டம்பர்.06-
பயணிகளை ஏற்றிச் செல்லும் பிஎஸ்வி லைசென்ஸின்றி இலங்கை பிரஜை ஒருவர் பேருந்தைச் செலுத்தியதை சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே கண்டுபிடித்துள்ளது.
பேருந்தின் சாலை வரி சிட்டை காலாவதியான நிலையில் காப்புறுதியின்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்தை 30 வயது மதிக்க இலங்கை பிரஜை செலுத்தியது ஜேபிஜே அதிகாரிகளை அதிரச் செய்துள்ளது.
நேற்று கோலாலம்பூர் – கிள்ளான் கூட்டரசு நெடுஞ்சாலையில் ஷா ஆலாமிற்கு அருகில் அந்தப் பேருந்துடன் அந்த இலங்கை பிரஜை பிடிபட்டதாக சிலாங்கூர் மாநில ஜேபிஜே இயக்குநர் அஸ்ரின் பொர்ஹான் தெரிவித்தார்.
தனது முதலாளியின் உத்தரவின் பேரில் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்தைக் கடந்த 6 மாத காலமாகச் செலுத்தி வருவதாக அந்த இலங்கை பிரஜை காரணம் கூறியிருப்பதாக அஸ்ரின் பொர்ஹான் குறிப்பிட்டார்.
போக்குவரத்து நிறுவனம் ஒன்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட அந்த பேருந்து பறிமுதல் செய்யப்பட்ட வேளையில் அந்த இலங்கை பிரஜையும் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.








