மலாக்கா, டிசம்பர்.16-
மலாக்கா மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு மட்டும் போடும் மாணவர்களின் சராசரி எண்ணிக்கை விதிதம் மூவாயிரம் பேராகும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரஹ்மாட் மரிமான் தெரிவித்துள்ளார்.
எனினும் மாணவர்கள் பள்ளிக்கு மட்டம் போடும் பிரச்னை மலாக்கா மாநிலத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள இதர மாநிலங்களிலும் நிகழ்ந்தாலும், இவ்வாறு மட்டம் போடும் மாணவர்களிள் எதிர்கால கல்வி நிலை, வெகுவாகப் பாதிக்கக்கூடும் என்ற பெரும் அச்சம் எழுந்துள்ளதாக மலாக்கா மாநிலத்திற்குக் கல்வி, உயர்க்கல்வி மற்றும் சமய விவகாரங்களுக்கு பொறுப்பேற்றுள்ள ஆட்சிக்குழு உறுப்பினரான டத்தோ ரஹ்மாட் மரிமான் குறிப்பிட்டார்.
மாணவர்கள் மத்தியில் உள்ள சோம்பேறித்தனம், பெற்றோர்கள் முறையாகக் கண்காணிக்காதது, வீட்டின் சூழ்நிலை காரணமாக இடைநிலைப்பள்ளி மாணவர்கள் பகுதி நேரம் வேலை செய்தல் முதலிய காரணங்களால் பள்ளிக்கு மட்டம் போடும் நிலை ஏற்படுகிறது என்று ஆய்வுகள் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் காய்ச்சல், உடல்நலக்குறைவு என்று காரணம் கூறும் மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் அதற்கான விடுமுறை சான்றிதழையோ அல்லது பெற்றோரின் கடிதத்தையோ வழங்குவதில்லை.
மாணவர்கள் பள்ளிக்கு மட்டம் போடுவது ஒரு மாதம் வரை தொடர்கிறது. சில வேளைகளில் இரண்டு மாதங்கள்கூட பள்ளிக்கு மட்டம் போடுகின்றனர் என்று மலாக்கா மாநில அளவில் நடைபெற்ற சமய இலாகா ஏற்பாட்டிலான நிகழ்வில் பேசுகையில் டத்தோ ரஹ்மாட் மரிமான் தெரிவித்தார்.








