Apr 15, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் ரிக்‌ஷா கட்டண மோசடி? சமூக வலைதளப் புகாரால் மாநகர் மன்றம் விசாரணை
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் ரிக்‌ஷா கட்டண மோசடி? சமூக வலைதளப் புகாரால் மாநகர் மன்றம் விசாரணை

Share:

மலாக்காவிற்குச் சுற்றுலா வந்த பயணி ஒருவரிடம், ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விடக் கூடுதல் கட்டணம் கோரியதாகச் சமூக வலைதளங்களில் வெளியான புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மலாக்கா மாநகர் மன்றத் தலைவர் டத்தோ ஷாதான் ஓத்மான் தெரிவித்துள்ளார்.

யாஸ்மின் ஆயிஷா என்ற பயனர் வெளியிட்டுள்ள பதிவில், ரிக்‌ஷாவில் ஒரு சுற்று வருவதற்கு முதலில் 50 ரிங்கிட் என ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், ஆனால் பயணம் முடிந்ததும் எந்தவித நியாயமான காரணமும் இன்றி ஓட்டுநர் 80 ரிங்கிட் கேட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

சமூக வலைதளப் புகாரில் ஓட்டுநரின் விவரங்கள் இல்லாததால், பாதிக்கப்பட்ட பயணி அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்குமாறு டத்தோ பண்டார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட ரிக்‌ஷா ஓட்டுநரின் உரிமத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

ரிக்‌ஷாக்களில் ஓட்டுநரின் அடையாள அட்டை மற்றும் QR கோட் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏமாற்றப்பட்டதாக உணரும் பயணிகள், அந்த QR கோடை ஸ்கேன் செய்து 24 மணி நேரத்திற்குள் புகார் அளிக்கலாம்.

மலாக்காவில் ஒரு ரிக்‌ஷா சவாரிக்கான கட்டணம் தூரத்தைப் பொறுத்து 25 முதல் 50 ரிங்கிட் வரை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

Related News