புத்ராஜெயா, டிசம்பர்.27-
2.8 பில்லியன் ரிங்கிட் முறைகேடு சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதத்திற்கு எதிராக நஜிப் சார்பில் மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் திங்கட்கிழமை, கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுஏரா வழங்கிய தீர்ப்பிலுள்ள ‘தவறுகளுக்கு’ எதிராக இந்த மேல்முறையீடானது இருக்கும் என்று நஜிப்பின் வழக்கறிஞர் டான் ஶ்ரீ முஹமட் ஷாஃபி அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இத்தீர்ப்பிலுள்ள 100 புள்ளிகளில் 50 புள்ளிகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், கற்றறிந்த நீதிபதி வழங்கிய தீர்ப்பிலுள்ள ஒவ்வொரு "புள்ளியிலும்" தான் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் ஷாஃபி தெரிவித்துள்ளார்.
நீதிபதி மீது மிகப் பெரிய மரியாதை வைத்திருந்த நேரத்தில், அவர் தனது தீர்ப்பில் பல தவறுகளைச் செய்துள்ளதாக ஷாஃபி குற்றம் சாட்டியுள்ளார்.
விசாரணை முழுவதிலும், வதந்தியின் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்தியது குறித்து எதிர்தரப்பு எழுப்பிய அனைத்து கேள்விகளையும் நீதிபதி கோலின் நிராகரித்து விட்டதாகவும் ஷாஃபி தெரிவித்துள்ளார்.
1950 ஆம் ஆண்டு சாட்சியச் சட்டம், பிரிவு 32 இல் பட்டியலிடப்பட்டுள்ள விதிகளுக்குள் வராவிட்டால், வதந்தி ஆதாரங்கள் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் ஷாஃபி குறிப்பிட்டுள்ளார்.
1எம்டிபி வழக்கில், முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு, 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 11.38 பில்லியன் ரிங்கிட் அபராதமும் விதித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.








