கோலாலம்பூர், அக்டோபர்.29-
மலேசியா ஏற்று நடத்திய 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டை வெற்றி பெறச் செய்த மலேசியர்களுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
பல வரலாற்று மைல்கற்களைக் குறிக்கும் 2025 ஆசியான் உச்சநிலை மாநாட்டின் வெற்றியை உறுதிச் செய்வதில் மலேசியர்களின் பங்களிப்பு அளப்பரியதாகும். அவர்களுக்கு இவ்வேளையில் பிரதமர் தமது நன்றியைப் பதிவு செய்துள்ளார் என்று பிரதமரின் ஊடகத்துறை செயலாளர் துங்கு நஷ்ருல் அபாய்டா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
திமோர் லெஸ்டே ஆசியானில் ஓர் உறுப்பு நாடாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதும், தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே போர் நிறுத்தம் தொடர்பான வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் கோலாலம்பூரில் கையெழுத்திடப்பட்டதும் மாநாட்டின் சில முக்கியச் சாதனைகளில் அடங்கும் என்று துங்கு நஷ்ருல் கூறினார்.
தவிர இந்த உச்ச நிலை மாநாட்டில் 80 ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட நிலையில், தலைவர்களின் மிகப் பெரிய மற்றும் மிக உயர்ந்த கூட்டமைப்பாகவும் ஆசியான் மாநாடு மாறியது என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடன் ஆசியான் தலைவர்கள் கூட்டு ஒப்பந்தங்களை பரிமாற்றம் செய்து கொண்டதும் இதில் அடங்கும் என்று அவர் விளக்கினார்.








