Jun 28, 2026
Thisaigal NewsYouTube
சமூகப் பயண அனுமதி முறைகேடு: தடுக்க மலேசிய அரசு சிறப்புப் பணிக்குழு அமைப்பு
தற்போதைய செய்திகள்

சமூகப் பயண அனுமதி முறைகேடு: தடுக்க மலேசிய அரசு சிறப்புப் பணிக்குழு அமைப்பு

Share:

அலோர் ஸ்டார், பிப்ரவரி.08-

சோஷியல் விசிட் பாஸ் எனும் சமூகப் பயண அனுமதியை வெளிநாட்டினர் தவறாகப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அதைத் தடுக்க சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைக்க மலேசிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து அண்மைய அமைச்சரவைக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டதாகவும், இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தலைமையில் இந்தப் பணிக் குழு செயல்படும் என்றும் உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளை மலேசியா வரவேற்றாலும், அவர்கள் நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்றும், சமூகப் பயண அனுமதியில் வருபவர்கள் இங்கு வேலை செய்யவோ அல்லது வணிகம் செய்யவோ அனுமதி இல்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறிவுறுத்தலின் பேரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பணிக்குழு, பயண அனுமதி முறைகேடுகளைக் கையாள்வதுடன், உள்நாட்டுச் சந்தையில் வெளிநாட்டுப் பொருட்கள் தேங்குவதையும் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபடும்.

முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் துறை, தொழில்முனைவோர் மேம்பாடு, வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு, உள்துறை அமைச்சு மற்றும் உள்நாட்டு வர்த்தகம் எனப் பல அமைச்சுகள் ஒன்றிணைந்து இந்த விவகாரத்தில் கையாளவிருக்கின்றன என்று சைஃபுடின் தெரிவித்தார்.

Related News