ஷா ஆலாம், ஜனவரி.23-
முதலீட்டு விவகாரங்களில் நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் புகாரில், கைது செய்யப்பட்டுள்ள 'டான் ஶ்ரீ' அந்தஸ்தைக் கொண்ட தொழிலதிபர் ஒருவரை விசாரணைக்காக 4 நாட்களுக்குத் தடுத்து வைப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் 10 மில்லியன் ரிங்கிட் அளவிலான முறைகேடாகத் தொடங்கப்பட்ட இந்த விசாரணை, தற்போது சுமார் 300 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பிரம்மாண்ட மோசடியாக உருவெடுத்துள்ளது. பல்வேறு தரப்பினரிடம் அதிக லாபம் தருவதாக ஆசை காட்டி முதலீடுகளைப் பெற்ற அந்த நபர், அந்த நிதியை முதலீட்டாளர்களுக்குத் தெரியாமல் முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
இந்த மோசடி தொடர்பாக, சம்பந்தப்பட்ட டான் ஶ்ரீ மற்றும் அவரது நிறுவனத்தின் இயக்குநராக இருக்கும் 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவரையும் ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது. இவர்கள் இருவரையும் வரும் ஜனவரி 25-ஆம் தேதி வரை 4 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து எஸ்பிஆர்எம் ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி கூறுகையில், இந்த நிறுவனம் கோலாலம்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு நாடு முழுவதும் உள்ள முதலீட்டாளர்களைக் கையாண்டுள்ளது என்றார்.
கைது செய்யப்பட்ட நபர், முதலீட்டாளர்களிடமிருந்து பெற்ற பணத்தைத் தனது சொந்தக் கணக்கிற்கு மாற்றியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்த வழக்கு 2009 ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.








