ஷா ஆலாம், நவம்பர்.21-
நான்கு நாள் தேடலுக்குப் பிறகு, இன்று காலை 10.30 மணியளவில் ஷா ஆலாம், சுங்கை கண்டீஸ் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட தனது தம்பி கே. சுரேஸ் உடல், நல்ல நிலையில் காணப்பட்டது என்று அவரின் அண்ணன் தெரிவித்தார்.
முகம் மற்றும் பச்சை குத்தலை அடிப்படையாகக் கொண்டு தமது சகோதரனை அடையாளம் காண முடிந்ததாக தனது பெயரைக் கூற விரும்பாத சுரேஸின் அண்ணன் குறிப்பிட்டார்.
தம்பியின் உடல் ஆற்றோரத்தில் ஒதுங்கிக் கிடக்கிறது என்று தகவல் கிடைத்தவுடன் போலீசார் அவ்விடத்திற்குத் தம்மையும், குடும்ப உறுப்பினர்கள் சிலரையும் அழைத்துச் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
பின்னர் ஷா ஆலாம் மருத்துவமனையில் சவக் கிடங்கில் தனது தம்பியைத் தாமும், குடும்ப உறுப்பினர்களும் அடையாளம் கண்டதாக அவர் மேலும் கூறினார்.
ஆகக் கடைசியாக தனது தம்பியைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாம் பார்த்தத்தாகவும், அவரிடம் எந்தவொரு மாற்றத்தையும் காண முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
வேலையில் சுறுசுறுப்பு கொண்ட தனது தம்பியின் மறைவு குடும்பத்திற்குப் பேரிழப்பாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த திங்கட்கிழமை மாலையில் கோலாலம்பூர், கம்போங் பாருவிற்கு அருகில் சுங்கை கிளாங் ஆற்றின் சலோமா பாலத்தின் கீழ் சக பணியாளர்களுடன் நின்று கொண்டு இருந்த போது, திடீரென்று கரைபுரண்டோடிய வெள்ளத்தில் 34 வயது கட்டுமான மேலாளரான சுரேஸ் அடித்துச் செல்லப்பட்டார்.








