ஷா ஆலாம், நவம்பர்.19-
அண்மைய காலமாக மாணவர்கள் சம்பந்தப்பட்ட கடும் குற்றச்செயல்கள் தொடர்பில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தமது கவலையைத் தெரிவித்துள்ளார்.
இது போன்ற கடுங்குற்றச்செயல் சம்பவங்கள் மாணவர்களின் தார்மீக மத மற்றும் குணநல வளர்ச்சி குறித்து கேள்வி எழுப்புவதாக உள்ளது என்று மாமன்னர் குறிப்பிட்டார்.
மாணவர்கள் சம்பந்தப்படும் கடுங்குற்றச்செயல்களால் அவர்கள் பயில்கின்ற பள்ளிகள் அல்லது உயர்க்கல்விக்கூடங்களின் தோற்றத்திற்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என்று மாமன்னர் நினைவுறுத்தினார்.
இன்று ஷா ஆலாமில் மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான UiTM-மின் 103 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அந்த பல்கலைக்கழகத்தின் வேந்தருமான சுல்தான் இப்ராஹிம் இவ்வாறு தெரிவித்தார்.
மாணவர்கள் மத்தியில் மனிதநேயம், ஒழக்கம், உணச்சிக் கட்டுப்பாடு முதலிய விவகாரங்கள் தொடர்புடைய விழிப்புணர்வை ஊட்டுவதில் கல்விக்கழகங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று மாமன்னர் தமது உரையில் வலியுறுத்தினார்.
ஒருவரையொருவர் மதிக்கும் மாண்பை வளப்படுத்தும் அணுகுமுறையின் மூலம் மாணவர்களை எதிர்காலத்தில் ஒழுங்கச் சீலர்களாக மாண்புறச் செய்ய முடியும் என்று மாமன்னர் நல்லுரை கூறினார்.








