கோலாலம்பூர், செப்டம்பர்.13-
சமூக ஊடகங்களில் மாமன்னர் மற்றும் மற்ற ஆட்சியாளர்களை இழிவுபடுத்தும் வகையில், அரசுக்கு எதிரான கருத்துகள் கொண்ட காணொளிகளை வெளியிட்டதாக நம்பப்படும் ஆடவரை புக்கிட் அமான் கைது செய்யதுள்ளது.
ஏற்கனவே, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட 3 வழக்குகளில் தொடர்புடைய அந்த ஆடவர், நேற்று செப்டம்பர் 12-ம் தேதி கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம்.குமார் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில், பொது ஒழுங்கு மற்றும் தேசியப் பாதுகாப்பை சீர்குலைக்கும் வகையிலான கருத்துகளை வெளியிடுபவர்கள் மீது, பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.
அதே வேளையில், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் பொதுமக்கள் எப்போதும் சட்டத்தை மதித்து மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் டத்தோ எம். குமார் வலியுறுத்தியுள்ளார்.








