May 2, 2026
Thisaigal NewsYouTube
பந்திங்கில் சிலாங்கூர் மாநில அளவிலான சித்திரை கலைவிழா: 23 ஆலயங்களுக்கு மானியம் வழங்கினார் பாப்பாராய்டு
தற்போதைய செய்திகள்

பந்திங்கில் சிலாங்கூர் மாநில அளவிலான சித்திரை கலைவிழா: 23 ஆலயங்களுக்கு மானியம் வழங்கினார் பாப்பாராய்டு

Share:

சிலாங்கூர் மாநில அளவிலான 2026-ஆம் ஆண்டு சித்திரை கலை விழா, பந்திங் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான கலாச்சார மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தொழிலாளர் தினத்தன்று தமிழர் பாரம்பரிய உணர்வுடன் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

மாலை மணி 7.30 – க்கு தொடங்கிய இவ்விழாவினை, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பா ராய்டு, குத்து விளக்கு ஏற்றி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். முன்னதாக, பாபாராய்டுக்கு ஆலயத் தலைவர் கே.வி. குமார் சிறப்பு மரியாதைகளைச் செய்து கௌரவித்தார். இடைவிடாது பெய்த கன மழையையும் பொருட்படுத்தாமல், பல்லின மக்களும் திரளாகக் கலந்து கொண்டது சிலாங்கூர் மாநிலத்தின் சமூக நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் விதமாக அமைந்தது. இக்கூட்டத்தைக் கண்டு நெகிழ்ந்த பாப்பாராய்டு, மழையை அன்னை மாரியம்மனின் அருளாகப் பார்ப்பதாகக் கூறி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

விழாவின் முக்கிய அங்கமாக, மாநில அரசின் ‘லீமாஸ்’ திட்டத்தின் கீழ் சிலாங்கூர் மாநிலத்தில் தகுதி பெற்ற 23 இந்து ஆலயங்களுக்கு மொத்தம் 2 லட்சத்து 48 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான இரண்டாம் கட்ட வருடாந்திர நிதி உதவி மானியத்தை ஆலயப் பொறுப்பாளர்களிடம் பாப்பாராய்டு வழங்கினார்.

தொடர்ந்து ஆற்றிய சிறப்புரையில், கல்வியே இந்தியச் சமுதாயத்தை மேலோங்கச் செய்யும் உன்னத கருவி என்பதை வலியுறுத்திய அவர், மாநில அரசு வழங்கும் இலவச தொழில்நுட்ப பயிற்சி போன்ற திட்டங்களை இளைஞர்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். அதேவேளையில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் பல விஷயங்களை சாதிக்க முடியும் என்பதையும் பாபாராய்டு தமது உரையில் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கோலா லங்காட் மாவட்ட அதிகாரி தெங்கு ரோஹானா, நகராண்மைக்கழகத் தலைவர் முகமது ஹஸ்ரி, நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ஹரிதாஸ் மற்றும் டாக்டர் சத்திய பிரகாஷ், சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் தீபன் மற்றும் டத்தோ ஜுரிஹான் எனப் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்த செயற்குழுவினருக்கு பாப்பாராய்டு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Related News