கோலாலம்பூர், ஆகஸ்ட்.28-
கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி கோலாலம்பூர், ஸ்தாப்பாக், தாமான் மெலாத்தியில் உள்ள துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும், ஒரு மாணவியும் தாங்கள் தங்கியிருந்த ஆடம்பர அடுக்குமாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் இருவருக்கும் இடையில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
தாங்கள் பயிலும் துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் அருகிலேயே அமைந்துள்ள அந்த ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் தங்கியிருந்த 22 வயது மாணவியும், 21 வயது மாணவரும் தங்களுக்கு இடையில் அறிமுகமில்லாதவர்கள் என்று பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.
இந்த இரண்டு சம்பங்களும் ஒரே நாளில் நிகழ்ந்த போதிலும் இரண்டுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. பல்கலைக்கழக மாணவி காலை 6.15 மணியளவில் விழுந்த வேளையில் மாணவன் அன்றிரவு 8 மணிக்கு கீழே விழுந்துள்ளான் என்று டத்தோ ஃபாடில் குறிப்பிட்டார்.
எனினும் தனது 22 வயது மகள், பகடிவதைக்கு ஆளாகியிருப்பதாக அந்தப் பெண்ணின் தாயார் செய்து கொண்ட போலீஸ் புகாரின் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.








