கோலாலம்பூர், டிசம்பர்.14-
நேற்று இரவு, கோலாலம்பூரை நோக்கி என்கேவிஇ விரைவுச் சாலையில் வந்து கொண்டிருந்த போது, ஒரு தனியார் செய்தி நிறுவனத்தின் விஷுவல் எடிட்டர், நடந்த அதிவேக மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தாப்பாவிலிருந்து இருந்து பங்சாரில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த 52 வயதுடைய அந்த நபர், டுகாத்தி வகை மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தபோது, 457.1வது கிலோமீட்டர் அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி பலத்த காயமடைந்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் ஷாம்சுடின் மாமாட் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக சுங்கை பூலோ மருத்துவமனை அதிகாரிகள் உறுதிச் செய்தனர். இன்று காலை அவரது உடல் உடற்கூறாய்வுக்காக மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக காவற்படையைத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.








