குவாந்தான், செப்டம்பர்.30-
சட்டவிரோத நில பயன்பாடு மூலம் லட்சக்கணக்கான ரிங்கிட்டை ஈட்டியதாகச் சந்தேகிக்கப்படும் மூசா கிங் டுரியான் தோட்டங்களின் சட்டவிரோத நிலக் குடியேற்றவாசிகள் உட்பட ஐவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்தது.
பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் அத்துமீறி நுழைந்து, மூசா கிங் டுரியான் மரங்களை நடவுச் செய்து, அதன் வாயிலாக கிடைக்கப் பெற்ற பணத்தை சட்டவிரோத பண மாற்றத்திற்கு பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு தோட்டப் பணியாளர் உட்பட ஐவரும், இன்று
குவாந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.
மாஜிஸ்திரேட் முகமட் ஃபௌஸான் முகமட் சுஹைமி முன்னிலையில் நிறுத்தப்பட்ட ஐவரும், வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு அனுமதி பெறப்பட்டது.
40 க்கும் 60 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐவரும் நேற்று பகாங், ரவூப் எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2024 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டு வரை இவர்கள் அனைவரும் மூசா கிங் டுரியான் மரங்களிள் விளைச்சலில் கிடைக்கப் பெற்றப் பணத்தைச் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.








