மாதுவும், அவரின் பதின்ம வயதுடைய இரு பிள்ளைகளும் கடந்த வாரம் வியாழக்கிழமை அம்பாங், கம்போங் பாருவில் உள்ள அவர்களின் அடுக்குமாடி வீட்டில் இறந்த கிடந்த சம்பவத்தில் எந்தவொரு குற்றத்தன்மையும் இல்லை என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசெயின் ஓமார் கான் தெரிவித்தார்.
அந்த மாதுவின் வீட்டில் சோதனையிட்டதில் ஒரு காகித குறிப்பும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பில், கடன்தாரர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்ததாக ஹுசெயின் ஓமார் குறிப்பிட்டார். புலன் விசாரணை அறிக்கையை தயாரிப்பதற்கு ஏதுவாக அந்த மாதுவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவர் வேலை செய்த நிர்வாகத்தினர் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.ஒப்பனைப் பொருட்கள் விற்பனை பணிப்பெண்ணான 42 வயது மாதுவும் அவரின் இரு பிள்ளைகளான 14 வயது மகளும் 15 வயது மகனும் காலை 7 மணியளவில் வீட்டில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. வீட்டின் ஜன்னல் இடுக்குகளில் காற்று நுழையாதவாறு செல்லொடேப் ஒட்டப்பட்டு இருந்த வேளையில் எரிவாயு களனிலிருந்து வாயு வெளியேறியுள்ளது. அந்த மூவரும் எரிவாயுவை நுகர்ந்து இருக்கலாம் என்று கூறப்பட்ட போதிலும் அவர்களின் மரணத்திற்கான காரணம் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக ஹுசெயின் ஓமார் குறிப்பிட்டார். 







