கோலாலம்பூர், ஜனவரி.24-
முதலீட்டு விவகாரங்களில் 300 மில்லியன் ரிங்கிட் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் புகாரில், கைது செய்யப்பட்டுள்ள 'டான் ஶ்ரீ' அந்தஸ்தைக் கொண்ட தொழிலதிபரின், 14 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில், இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கிள்ளான் பள்ளத்தாக்கில் மொத்தம் ஐந்து இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 2021 மற்றும் 2024-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில், சுமார் 1,700 பேர், இரண்டு நிறுவனங்களில் கிட்டத்தட்ட 300 மில்லியன் ரிங்கிட்டை முதலீடு செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
என்றாலும், சோதனைகளின் போது, அந்த நிதியானது முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு, முதலீட்டு ஒப்பந்தங்களில் ஒப்புக்கொள்ளப்பட்ட நோக்கங்களுக்குப் புறம்பான காரியங்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்ததுள்ளது.
இது தொடர்பாக தற்போது இரண்டு விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், தவறாகப் பயன்படுத்தப்பட்ட நிதிகளைக் கண்டறிந்து அவற்றை மீட்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் எஸ்பிஆர்எம் தலைவர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.








