சிரம்பான், ஆகஸ்ட்.16-
டெங்கர் லோரி ஒன்றுக்கு வெல்டிங் செய்யும் பணியின் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிச் சம்பவத்தில் லோரி ஓட்டுநர் கடும் காயங்களுக்கு ஆளாகி மரணமுற்ற வேளையில் பட்டறைப் பணியாளர் ஒருவர் படுகாயத்திற்கு ஆளாகினார்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.20 மணியளவில் சிரம்பான், கோல சாவா, கம்போங் பெலங்கானில் உள்ள ஒரு பட்டறையில் நிகழ்ந்தது. இதில் லோரி ஓட்டுநரான 33 என். ஜெயகோபிநாத், கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பட்டறைப் பணியாளரான 40 வயது சுஹார்ஃபி லபெட்டு என்பவர் கடும் காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Hexane வகை ரசாயனத்தை ஏற்றும் அந்த டெக்கர் லோரியில் ரசாயனம் எதுவும் ஏற்றப்படாத நிலையில் லோரியின் வால்வு மீது வெல்டிங் வைக்கும் பணியின் போது பயங்கர வெடிச் சம்பவம் நிகழ்ந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று தீயணைப்பு, மீட்புப்படை கமாண்டர் முகமட் ஷாஸ்வான் சைடி தெரிவித்தார்.
லோரி ஓட்டுநர் ஜெயகோபிநாத் உடல், சிரம்பான் துவாங்கு ஜாஃபார் மருத்துவமனையின் சவக் கிடங்கிற்குக் கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் பட்டறைப் பணியாளர், அம்புலன்ஸ் வண்டியின் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








