ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, பினாங்கு, பாலத்தில் துப்பாகியினால் சரமாரியாக சுட்டத்தில் மூன்று நபர்களின் மரணத்திற்கு காரணமாகவும், இதர ஐவரின் உயிருக்கு பெரும் மிரட்டலை ஏற்படுத்தியவருமான முன்னாள் மெய்காவலர் ஒருவரை மன நல மருத்துவமனையில் அனுமதிக்க புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரான நுருல் இசா மற்றும் பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான அஸ்மின் அலி ஆகியோருக்கு மெய்காவலாக பணியாற்றிய நபரான அந்த முன்னாள் ஊழியர் ஜாஃபார் ஹாலிட்,க்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை அப்பீல் நீதிமன்றம் ரத்துசெய்தது.
பினாங்கு பாலத்தில் வாகனமோட்டிகளுக்கு பெரும் பீதியை ஏற்படுத்திய நபரான 43 வயதுடைய ஜாஃபார் ஹாலிட்,சம்பவம் நிகழும் போது மனநல பாதிப்புக்கு ஆளாகியுள்ளார் என்பதில் நீதிமன்றம் மனநிறைவு கொள்வதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி ஹடாரியா ஷெட் இஸ்மாயில் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் தம்முடன் ஒரே காரில் பயணம் செய்த தனது முதலாளியான 32 வயது ஒங் தெய்க் வோன், கேளிக்கைப் பணியாளரான 32 வயது சொய் ஹொன் மிங் மற்றும் பூக்கடை வியாபாரியான 38 வயது செந்தில் முருகையா ஆகியோரை ஜாஃபார் ஹாலிட் சுட்டுக்கொன்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.








