கோலாலம்பூர் துங்கு அஜிசா மருத்துவமனையில் மருத்துப் பயிற்சியில் உள்ள அதிகாரிகள் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டுமென மலேசிய மருத்துவ சங்கமான எம்எம்ஏ கோரிக்கை விடுத்துள்ளது.
இச்சம்பவம் சுகாதார அமைப்பில் உள்ள பலவீனங்களை வெளிப்படுத்தும் முக்கிய குறைபாடாகும் என்றும் எம்எம்ஏ விமர்சித்துள்ளது.
மேலும், அமைப்பின் உள்ளக குறைபாடுகளை கண்டறிய சுயாதீனமான உள்நிலை விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், குற்றவியல் மற்றும் நிர்வாக ரீதியான அனைத்து அம்சங்களும் ஆராயப்பட வேண்டும் என்றும் எம்எம்ஏ வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, இந்த சம்பவம் நிர்வாக பாதுகாப்பு அமைப்பில் ஏற்பட்ட முறிவை காட்டுகிறது என்றும், இளம் மருத்துவர்கள் பாதிக்கப்படக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் எம்எம்ஏ தலைவர் திருநாவுக்கரசு ராஜூ தெரிவித்துள்ளார்.
இது தனிநபர் தவறு அல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், அமைப்பு சார்ந்த தோல்வி என்பதை காட்டுவதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நிர்வாக உதவியாளர் ஒருவர் சுமார் 190 மருத்துவ பயிற்சி அதிகாரிகளிடம் 47,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கடந்த வாரம் போலீஸ் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








