பெந்தோங், ஜனவரி.25-
காராக் நெடுஞ்சாலையில் சாலைப் போக்குவரத்துத் துறை மேற்கொண்ட சிறப்புச் சோதனையில், போலி பதிவு எண்கள், காலாவதியான சாலை வரி போன்ற பல்வேறு குற்றங்களுக்காகச் சுமார் 1.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஆறு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வேகக் கட்டுப்பாட்டு கேமராக்களிடமிருந்து தப்பிப்பதற்காகப் போலி பதிவு எண்களைப் பயன்படுத்திய வாகன உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமலாக்கப் பிரிவு இயக்குநர் டத்தோ முஹமட் கிஃப்லி மா ஹசான் எச்சரித்துள்ளார்.
இந்தச் சோதனையின் போது சொகுசு கார்களுடன் சேர்த்து 110 மோட்டார் சைக்கிள்களும் இதர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதோடு, விதிமீறல்களில் ஈடுபட்ட வாகனமோட்டிகளுக்கு மொத்தம் 1,203 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 183 அதிகாரிகள் பங்கேற்ற இந்த ஒருநாள் கூட்டு நடவடிக்கையில், ஓட்டுநர் உரிமம் இல்லாதது, காப்புறுதி பாதுகாப்பு இல்லாதது போன்ற சாலை விதிகளைப் புறக்கணிக்கும் செயல்களுக்கு எவ்வித சமரசமும் இன்றி அபராதம் விதிக்கப்பட்டது.








