பட்டர்வொர்த், ஆகஸ்ட்.15-
மூதாட்டி ஒருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதாக நம்பப்படும் பொருள் பட்டுவாடா பணியாளரான இளைஞர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த நபரை நேற்று பட்டர்வொர்த், பாகான் லாலாங்கில் போலீசார் கைது செய்துள்ளனர். 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர், இன்று காலையில் பட்டர்வொர்த் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பல்கிஸ் ரொஸ்லின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கான அனுமதியைப் போலீசார் பெற்றுள்ளனர்.
சம்பவம் நடந்த அன்று காலை 8.45 மணியளவில் 70 வயது மூதாட்டி, தனது வீட்டின் முன்புறம் பூச்செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டு இருந்த போது, புரோட்டோன் ஐரிஸ் ரகக் காரில் வந்த அந்த நபர், சிஓடி முறையில் பொருளைப் பட்டுவாடா செய்ய வந்திருப்பதாகக் கூறியுள்ளார்.
அந்த மூதாட்டியும் வீட்டிற்குச் சென்று 31 ரிங்கிட்டை எடுத்து வந்து அந்த ஆடவரிடம் ஒப்படைத்துள்ளார். அப்போது அந்த மூதாட்டியின் கழுத்தில் கையை வைத்த அந்த ஆடவர், அவரைக் கீழே தள்ளிவிட்டு, தங்கச் சங்கலியைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.








