கடந்த 2025 -ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில், குடிநுழைவுச் சட்டங்களை மீறியதாக 1 லட்சத்து 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணமற்ற வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோதனை நடவடிக்கைகளில், சுமார் 6.59 லட்சம் பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் முறையான வருகை அனுமதி அல்லது வேலை அனுமதியின்றி இருப்பது, அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டித் தங்கியிருப்பது உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதே காலகட்டத்தில் விதிமீறல்களுடன் தொடர்புடைய 6,099 முதலாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஆணையமான UNHCR ஆவணங்களைப் போலியாகத் தயாரித்தது தொடர்பான வழக்கு ஒன்று கோலாலம்பூரில் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் ஆறு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அகதிகள் எனக் கூறிக்கொள்பவர்களை முறையாகப் பதிவு செய்து கண்காணிப்பதற்காக, டிபிபி (DPP) எனப்படும் அகதிகள் பதிவு ஆவணம் என்ற புதிய பதிவு முறையைச் செயல்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இதில் அடையாளச் சரிபார்ப்பு, உயிரியல் அடையாளப் பதிவுகள், பாதுகாப்புச் சோதனைகள் மற்றும் நேர்காணல்கள் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், UNHCR அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் தானாகவே டிபிபி பதிவுக்குத் தகுதி பெறமாட்டார்கள் என்றும், ஒவ்வொருவரின் அகதி நிலை தனித்தனியாக மதிப்பீடு செய்யப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
போலி ஆவணங்கள், அடையாளத் திருட்டு மற்றும் முரண்பாடான தகவல்களைக் கண்டறிந்து, வெளிநாட்டினர் தொடர்பான பதிவுகளை மேலும் முறையாக நிர்வகிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் எனவும் விளக்கமளித்துள்ளது.








