கோலாலம்பூரில் உள்ள தனியார் டியூஷன் நிலையத்தில் பயிலும் ஐந்து மாணவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இம்மாதத் தொடக்கத்தில் நடந்ததாகக் கூறப்படுகின்றது.
சந்தேக நபரின் வீட்டிலேயே டியூஷன் நிலையம் செயல்பட்டு வந்ததாகவும், அங்கு மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக ஐந்து புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கோலாலம்பூர் மாவட்ட போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புக்கிட் ஜாலில் போலீஸ் நிலையத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி ஒரு புகாரும், அக்டோபர் 10-ஆம் தேதி மற்றொரு புகாரும், அக்டோபர் 11ஆம் தேதி மேலும் மூன்று புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் போலீசார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர். விசாரணைக்கு மாணவர்கள் பயிலும் பள்ளி நிர்வாகமும் மாவட்டக் கல்வி அலுவலகமும் உதவி வருகின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.








