2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம், மலேசிய இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக பிகேஆர் கட்சியின் தொடர்புத்துறை துணை இயக்குநர் ஜோனாதன் வேலா தெரிவித்துள்ளார்.
இந்தியச் சமுதாயத்துக்கான மித்ரா ஒதுக்கீடு 100 மில்லியனிலிருந்து 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் திறன் பயிற்சி, குறிப்பாகத் தொழில்நுட்பம் மற்றும் விமானப் பராமரிப்புத் துறைகளில் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்தியச் சிறு தொழில்முனைவோருக்கு தெக்குன் மற்றும் அமானா இக்தியார் மலேசியா வழியாக 150 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியும், பழைய கட்டட அமைப்பைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 50 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மித்ரா, தொழில்முனைவோர் நிதி, தமிழ்ப்பள்ளிகள் ஆகிய மூன்று பிரிவுகளுக்கான மொத்த ஒதுக்கீடு 350 மில்லியன் ரிங்கிட். இது 2026ஆம் ஆண்டின் 220 மில்லியன் ரிங்கிட்டைவிட சுமார் 59 விழுக்காடு அதிகம் என்றும் ஜோனாதன் வேலா குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிதி உண்மையில் தேவைப்படுவோருக்குச் சென்றடைந்து, வேலைவாய்ப்பு, வருமானம் மற்றும் குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டும் என்றும் ஜோனாதன் வேலா வலியுறுத்தியுள்ளார்.








