தெலுக் இந்தான், டிசம்பர்.02-
பேராக் மாநிலம் தெலுக் இந்தானில் கடந்த சனிக்கிழமை, தோட்டப்புறம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த ஆடவரை முதலைத் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார்.
கம்போங் சுங்கை புவாயா என்ற இடத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து, மாலை 6.30 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக பேராக் மாநில வன விலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை இயக்குநர் யுசோஃப் ஷாரிஃப் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக அந்த முதலையானது அருகில் இருந்த ஆற்றிலிருந்து தோட்டப் பகுதிக்குள் வந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தாக்குதலில் அந்த ஆடவரின் இடது கால் முட்டிப் பகுதியில் பலத்தக் காயம் ஏற்பட்டது.
இச்சம்பவத்தையடுத்து, அந்தத் தோட்டப்புறப் பகுதியில் உலாவி வரும் அந்த முதலையைப் பிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதோடு, பொதுமக்களுக்கு அது குறித்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.








