கோலாலம்பூர், ஜூலை.14-
நீதித்துறையில் நீதிபதிகள் நியமனம் தொடர்பான அதன் ஆணையமான ஜேஏசியின் கூட்ட நிமிடக் குறிப்புகள் கசிந்ததாகக் கூறப்படுவது தொடர்பில் விரிவான விசாரணை தேவை என்று முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மற்றும் முன்னாள் சட்டத்துறைத் துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக நீதித்துறையில் அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் நீதித்துறை தலையீடு தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படுவது அவசிமாகும் என்று முகைதீன் யாசினும், ராம் கர்ப்பாலும் தனித் தனியாக வெளியிட்ட அறிக்கைகளில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்குமானால் நீதித்துறையில் நீதிபதிகள் நியமனத்தில் ஒரு நபர், தனது உரிமையைப் பயன்படுத்தக்கூடும் என்று முகைதீன் குறிப்பிட்டார்.
நீதித்துறை நியமனங்கள் நேர்மையுடன் மேற்கொள்ளப்படுவதை உறுதிச் செய்வதற்கு இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படுவது அவசியமாகும் என்று ராம் கர்ப்பால் கேட்டுக் கொண்டுள்ளார்.








