Sep 26, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்
தற்போதைய செய்திகள்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

Share:

மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்யப்படாது என்றும், குறிப்பாக தங்களது கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் தொடர்புடைய பாலியல் புகார்கள் எழுந்தால் மிகக் கடுமையான முறையில் அவை கையாளப்படும் என்றும் மஜ்லிஸ் அமானா ராக்யாட் எனப்படும் மாரா கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்தகைய புகார்கள் பெறப்பட்ட உடன் அவற்றைச் கையாள்வதற்கு, தங்களது நிறுவனங்களில் தக்க செயல்பாட்டு நடைமுறைகள் அமலில் உள்ளதாக மாரா தலைவர் டத்தோ டாக்டர் அஷ்ரப் வஜ்டி டுசுகி தெரிவித்துள்ளார்.

மாரா நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எம்ஆர்எஸ்எம் எனப்படும் மாரா இளையோர் அறிவியல் கல்லூரிகள் உட்பட அனைத்து நிறுவனங்களிலும், புகார் பெற்றவுடன் முதற்கட்டமாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது போலீஸ் புகார் அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை நிறைவடையும் வரை அந்த ஆசிரியர் மாநில மாரா அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவார் என்றும் டத்தோ டாக்டர் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

டத்தோ டாக்டர் அஷ்ரப்வின் இந்த விளக்கமானது, கல்விச் செயற்பாட்டாளரும், முன்னாள் ஆசிரியருமான முகமது ஃபட்லி சல்லே என்பவர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது.

மாரா இளையோர் அறிவியல் கல்லூரி ஒன்றில், படிவம் மூன்று மாணவர் ஒருவர், தமது ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்முகமது ஃபட்லி சல்லே தமது முகநூல் பதிவு ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் அந்த 28 வயதான ஆசிரியர், தொடர்ந்து எம்ஆர்எஸ்எம்-இல் கற்பித்து வருவதாக முகமது ஃபட்லி சல்லே குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், அதற்குப் பதிலளித்துள்ள டத்தோ டாக்டர் அஷ்ரப், சம்பந்தப்பட்ட ஆசிரியர் தற்போது, மாநில மாரா அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், அவர் மாணவர்களுக்கு கற்பிக்கவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News