கோலாலம்பூர், டிசம்பர்.19-
புதிதாகப் பதவியேற்றுள்ள மனித வள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன், இன்று வெள்ளிக்கிழமை, சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ தலைமையகத்திற்குத் தனது முதல் அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்ட போது, நாட்டில் உள்ள தொழிலாளர்கள் நலனைப் பாதுகாப்பதற்கான முக்கியத் திட்டங்களை முன்னிலைப்படுத்தினார்.
குறிப்பாக நாட்டில் உள்ள தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சொக்சோவை மேலும் பலப்படுத்தும் நோக்கில் டத்தோஸ்ர ஶ்ரீ ரமணன் அறிவித்த நான்கு திட்டங்கள் அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நான்கு திட்டங்களில் முதன்மையானது, லிண்டோங் 24 ஜாம் என்பதாகும். பணி நேரத்தில் மட்டுமின்றி, 24 மணி நேரமும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் இந்தத் திட்டம், 2026-ஆம் ஆண்டின் முதல் அல்லது இரண்டாம் காலாண்டுக்குள் அமல்படுத்தப்படும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.
1969-ஆம் ஆண்டு சொக்சோ சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது மூலம் வேலை நேரத்திற்கு பிறகு வெளியே ஏற்படும் விபத்துகளுக்கும் சொக்சோ பாதுகாப்பு வழங்குவது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதற்கு வயது வரம்பு கிடையாது என்று அமைச்சர் விளக்கினார்.

தவிர, சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும் மலேசியத் தொழிலாளர்களுக்காக ஸ்கிம் பெங்கெம்பாரா என்ற ஒரு சிறப்புப் பாதுகாப்புத் திட்டத்தையும் டத்தோ ஶ்ரீ ரமணன், சொக்சோவிடம் பரிந்துரை செய்துள்ளார்.
ஜோகூர் பாலம் வழியாகத் தினமும் சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும் சுமார் 4 லட்சம் மலேசியத் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்குவதற்காக இந்தத் திட்டத்தை ஆராயுமாறு அவர் சொக்சோவிற்குப் பணித்துள்ளார்.
குறிப்பாக, வேலைக்காகத் தினமும் பயணம் செய்யும் போது ஏற்படும் அபாயங்களில் இருந்து மலேசியத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

தவிர, முதலாளிகளுக்கான அபராதக் கட்டணமான FCLB –யில் 80 விழுக்காடு தள்ளுபடி சலுகை மற்றும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மக்கள், சொக்சோ நன்மைகளைப் பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி போன்ற முக்கிய அறிவிப்புகளையும் டத்தோ ஶ்ரீ ரமணன் வெளியிட்டார்.
முன்னதாக, சொக்சோ தலைமையகத்தின் நடவடிக்கைகள் குறித்து டத்தோ ஶ்ரீ ரமணனுக்கு சுற்றிக் காண்பிக்கப்பட்டது. டத்தோ ஶ்ரீ ரமணனின் இந்த வருகையின் போது, மனித வள அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அஸ்மான் முகமட் யூசோஃப், சொக்சோ வாரியத் தலைவர் டத்தோ ஶ்ரீ சுபஹான் கமால் மற்றும் சொக்சோ தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஶ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் ஆகியோர் உடன் இருந்தனர்.








