கோலாலம்பூர், டிசம்பர்.08-
நாட்டில் லஞ்சம் கொடுப்பவர்களை மகிமைப்படுத்தும் போக்கு அதிகரித்து வருவது குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கவலை தெரிவித்துள்ளார்.
லஞ்சம் கொடுப்பவர்களை வணங்குவதும், அவர்களை மகிமைமிக்கவர்களாகப் பார்ப்பதும் அண்மைய காலமாக அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அன்வார், அது போன்ற செயல் நாட்டின் முன்னேற்றத்தை மிகவும் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், முன்னேற்றம் என்ற பெயரில் மனித நேயத்தில் எந்த விதத்திலும் சமரசமும் செய்யக்கூடாது என்றும் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பொதுப்பணித்துறை அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் பேசிய அன்வார் தெரிவித்தார்.
நாட்டில் நிலவி வரும் அரசியல் மற்றும் சித்தாந்த வேறுபாடுகளின் காரணமாக அவ்வப்போது மனித நேயமானது மறைந்து வருவதாகவும் அன்வார் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மக்கள் வாழ்வதற்கு உதவுவதற்காகவே கட்டிடங்களும் பாலங்களும் கட்டப்படுகின்றன எனக் குறிப்பிட்ட அன்வார், அவற்றை வளர்ச்சி என எண்ணிவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
எந்த சூழ்நிலையிலும் மனித நேயமானது மறக்கப்படக் கூடாது என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.








