கோலாலம்பூர், நவம்பர்.09-
அண்மையில் கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலையில் அதிவேகமாகச் சென்று, விபத்துக்குள்ளான ஒரு காரின் பதைபதைக்க வைக்கும் காணொளியால் அதன் ஓட்டுநர் விசாரணைக்காகக் காவற்படையால் அழைக்கப்பட்டுள்ளார். வெறும் 29 வினாடிகள் வரை நீடிக்கும் அந்தத் தீயாகப் பரவியக் காணொளியில், ஒரு Proton S70 கார் கண்ணிமைக்கும் வேகத்தில் மற்ற வாகனங்களை முந்திச் சென்று, இறுதியில் ஒரு வளைவில் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பை மோதிச் சுழல்வது பதிவாகியுள்ளது.
இந்த விபத்து கடந்த புதன்கிழமை நள்ளிரவு 12:30 மணியளவில் நடந்ததாகக் கூறிய பெந்தோங் மாவட்ட காவற்படைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஸைஹாம் முகமட் காஹார், 24 வயதுடைய அந்த உள்ளூர் ஓட்டுநர் காயமின்றித் தப்பினார், ஆனால் வாகனம் மிக மோசமாகச் சேதமடைந்தது என்றார். அந்தச் சாலையைக் பந்தயத் தளமாக மாற்றும் அபாயகரமான ஓட்டுநர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வலியுறுத்தி, காவற்படை இந்தச் சம்பவத்தை சாலைப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு விதிகள் 1959, விதி 10 இன் கீழ் விசாரித்து வருகிறது.








