கோலாலம்பூர், ஜனவரி.05-
2026 பள்ளி புதிய கல்வியாண்டு இந்த ஜனவரியில் தொடங்கப்படுவதை முன்னிட்டு புதிய மழலையர் பள்ளிப் பாடத் திட்டம், 6 பிரதான அம்சங்களைக் கொண்டு இருக்கும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் இன்று அறிவித்துள்ளார்.
திட்டமிட்டபடி 2027-ஆம் ஆண்டில் தொடங்கப்படாமல், ஓர் ஆண்டுக்கு முன்னதாகவே அதாவது 2026-லேயே புதிய மழலையர் பள்ளி பாடத் திட்டம் அமல்படுத்தப்படவிருக்கிறது. இது குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையான 6 பிரதான துறைகளில் கவனம் செலுத்தும் என்று ஃபாட்லீனா சீடேக் குறிப்பிட்டார்.
சமூக - உணர்ச்சி வளர்ச்சி, உடல் வளர்ச்சி மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு, மொழி மற்றும் எழுத்தறிவு, ஆன்மீகம் மற்றும் குடியுரிமை, படைப்பாற்றல் மற்றும் அழகியல், அறிவுசார் வளர்ச்சி ஆகியவையே அந்த 6 துறைகளாகும் என்று அமைச்சர் விளக்கினார்.
2026-ஆம் ஆண்டிற்கான கல்வி அமைச்சின் இரண்டாவது முன்னுரிமையாக, நாட்டின் புதிய கல்வி மேம்பாட்டுத் திட்டம், இந்த ஜனவரி மாதத்திலேயே அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவிருப்பதையும் ஃபாட்லீனா சீடேக் சுட்டிக் காட்டினார்.
இது நீண்ட காலக் கல்விச் சீர்திருத்தங்களை உள்ளடக்கியதாக அமையும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.








