கோலாலம்பூர், நவம்பர்.28-
கடந்த 2018 ஆம் ஆண்டு மரணமுற்ற அரச மலேசிய கடற்படையின் கேடட் அதிகாரி J. சூசைமாணிக்கம் மரணம் தொடர்பில் அவரின் உடலில் சவப் பரிசோதனை நடத்திய மருத்துவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அந்த இளம் வீரரின் குடும்பத்தினர் மலேசிய மருத்துவர் சங்கத்திற்கு மகஜர் ஒன்றை வழங்கியுள்ளனர்.
பேரா, ஶ்ரீ மஞ்சோங் மருத்துவமனையில் நடத்தப்பட்ட முதல் பிரேத பரிசோதனையில் சூசைமாணிக்கத்தின் இறப்பிற்கான காரணம், நுரையீரல் வீக்கம் அல்லது நுரையீரலில் திரவம் பட்டுள்ளது என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இது சூசைமாணிக்கம் பயிற்சியில் ஈடுபட்ட லுமூட், கடற்படைத் தளத்தில் K.D. Sultan Idris வளாகத்தில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும் 2023 ஆம் ஆண்டு ஈப்போ மரண விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் சூசைமாணிக்கத்தின் மரணத்தில் யார் பொறுப்பு என்று தீர்மானிக்க முடியாவிட்டாலும். கடற்படை அதிகாரிகள் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மறுத்ததன் காரணமாகவே அந்த வீரருக்கு மரணம் நேர்ந்தது என்று தெரிவித்துள்ளது.
இதன் தொடர்பில் சூசைமாணிக்கத்தின் உடலில், பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவரிடம் விசாரணை நடத்தப்படுவதற்கு வகை செய்யுமாறு அந்த வீரரின் சகோதாரர் சார்லஸ் ஜோசப், மகஜர் ஒன்றை மலேசிய மருத்துவர் சங்கத்திடம் வழங்கியுள்ளார்.








