கோலாலம்பூர், ஜூலை.28-
சுற்றுலாத் துறைகளுக்கான லைசென்ஸ் உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுலா, கலை, கலாச்சாரத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ கியோங் கிங் சிங் எச்சரித்துள்ளார்.
சபா மாநிலத்தில் செம்புர்னாவில் முக்குளிப்பு பயிற்றுநருக்கும், சுற்றுப் பயணிகளுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பைச் சித்தரிக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது தொடர்பில் கருத்துரைத்த போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வு, முக்குளிப்பு நடவடிக்கையின் போது நிகழ்ந்ததாகக் கூறப்படுவதாக அமைச்சர் தியோங் தனது முக நூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சுற்றுப் பயணி ஒருவர் படகில் தவறான இடத்தில் வைத்த ஆக்சஜன் சிலிண்டர் தவறி விழுந்து முக்குளிப்பு பயிற்றுநரின் காலில் விழுந்து காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பில் முடிந்துள்ளது என்று அமைச்சர் விளக்கினார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இவ்விவகாரத்தை அமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
இதில் விதி மீறல்கள் நிகழ்ந்து இருக்குமானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
அனைத்து தரப்பினரின் பாதுகாப்பை உறுதிச் செய்ய சுற்றுப் பயணிகள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் பயிற்றுநர்கள் மத்தியில் ஒத்துழைப்பு நிலவுவது அவசியம் என்று அமைச்சர் தியோங் வலியுறுத்தினார்.








