சுங்கை சீப்புட், பிப்ரவரி.08-
மலேசியாவில் ஊராட்சி மன்றத் தேர்தல்கள் என்பது புதிய கருத்தாக்கம் அல்ல, இவை 1960-களில் இந்தோனேசியா-மலேசியா மோதலுக்கு முன்னரே நடைமுறையில் இருந்தன என்று வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெளிவுபடுத்தியுள்ளார்.
அந்தக் காலக் கட்டத்திக் நிலவிய பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தத் தேர்தல்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனால், நாட்டின் இந்த வரலாற்றுப் பக்கத்தை பலர் மறந்து விட்டனர் என்று அவர் கூறினார்.
ஊராட்சி மன்றப் பொறுப்பாளர்களைத் தேர்தெடுக்கும் மேயர் தேர்தல்கள் ஒன்றும் புதியதல்ல. உண்மையில், நமக்கு முன்பே ஊராட்சி மன்றத் தேர்தல்கள் இருந்தன. நாடாளுமன்ற மேலவையில், மறைந்த செனட்டர் டான் ஶ்ரீ ஆதி. நாகப்பன் ஓர் அரச ஆணையத்தை அமைக்க முன்மொழிந்தார். அதன்பின் ஒரு ஆய்வு நடத்தப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தப் பரிந்துரைத்தது. ஆனால், அப்போதைய மோதல் சூழலால் அது ஒத்திவைக்கப்பட்டது என்றார் ங்கா கோர் மிங்.
மேலும் ஊராட்சி மன்றத் தேர்தல்களுக்கான அந்த 'தற்காலிக' ஒத்திவைப்பு 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அதனால்தான் இது புதிய விஷயம் அல்ல என்கிறேன் என்று சுங்கை சிப்புட், சிம்பாங் ஜாலோங் புதிய கிராமத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களிலும், அண்டை நாடுகளிலும் மேயர் தேர்தல்கள் நடப்பதை அவர் Nga ங்கா கோர் மிங் சுட்டிக் காட்டினார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக் மற்றும் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா போன்ற மாநகரங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்கள் உள்ளனர்.
நம்மால் ஒரு பிரதமரைத் தேர்ந்தெடுக்க முடியும் போது, மாநகரங்களுக்கு தலைமையேற்க ஏன் ஒரு மேயரைத் தேர்ந்தெடுக்க முடியாது? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
லண்டன் நகரை உதாரணமாகக் காட்டிய ங்கா கோர் மிங், மேயர் சாடிக் கான், ஒரு முஸ்லிம் என்பதால் அல்ல, மாறாக அவர் சேவை செய்பவர் என்பதால் மக்கள் அவரை லண்டன் மேயராக தேர்ந்தெடுத்தனர் என்றார்.
அதே போல், நியூயார்க்கில் உள்ள முஸ்லிம் தலைவர்களையும் சுட்டிக் காட்டி பேசிய ங்கா கோர் மிங், தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் அவர்களின் இனமோ மதமோ அல்ல, மாறாக அவர்களின் சேவையும் திறமையுமே முக்கியம் என்று வலியுறுத்தினார்.
ஊராட்சி மன்றத் தேர்தல்களில் நாங்கள் அக்கறை கொள்கிறோம், சேவை செய்கிறோம், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் கட்சியான டிஏபியிலிருந்து வந்தவர்கள் என்று ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.








