இஸ்ரேலின் அடக்குமுறையினால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பள்ளிகளின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒருமைப்பாட்டு நிகழ்வில் ஆசிரியர்களும், மாணவமணிகளும் மாதிரி துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதற்கு கல்வி அமைச்சு தடை விதித்துள்ளது.
அதேபோன்று இந்த ஒருமைப்பாட்டு நிகழ்வில் அரசியல் கட்சிகளை ஊக்குவிப்பதையும் கல்வி அமைச்சு தடை செய்துள்ளதாக அதன் அமைச்சர் ஃபட்லினா சிடெக் நினைவுறுத்தியுள்ளார். பாலஸ்தீன ஆதரவு ஒருமைப்பாட்டு வாரத்திற்காக பிரத்தியேக வழிகாட்டல் ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டு இருப்பதாகவும் ஃபட்லினா சிடெக் தெரிவித்தார்.
பள்ளிகளில் தீவிரவாதத்தன்மையிலான அம்சங்கள் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும். உண்மைகளை கையாளவும், குறிப்பிட்ட தரப்பினரின் செயல்களை அல்லது மதங்களை குற்றஞ்சாட்டுவது அறவே கூடாது. பள்ளிகளில் மோதல்களுக்கு வழிகோலும் எத்தகைய அம்சங்களும் ஊடுருப்படக்கூடாது. தவிர இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் ஒரு தலைபட்சமாக கண்ணோட்டம் வெளிப்படுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்தை கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் கேட்டுக்கொண்டார்.








